நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அன்று  "அஃக்' இதழை நடத்தியவர்... இன்று... ?

சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, அஃக் இதழை தொடங்கி கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, அம்பை, ஜெயகாந்தன் என சுமார் 100 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக் கொண்டு வந்தவர் 75 வயதான பரந்த்தாமன்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:27 am

ஆர். ஆதித்தன்

சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, அஃக் இதழை தொடங்கி கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, அம்பை, ஜெயகாந்தன் என சுமார் 100 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக் கொண்டு வந்தவர் 75 வயதான பரந்த்தாமன்.

தற்போது உடல் நலம் பாதித்து, மனப் பிறழ்வு ஏற்பட்ட நிலையில் சென்னை காப்பகத்தில் யாருடைய ஆதரவுமின்றி, மருத்துவச் சிகிச்சைக்குக் கூட போதிய நிதியின்றி, தன்னை மறந்த நிலையில் உள்ளார்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் நல்லாக் கவுண்டர், லட்சுமி தம்பதிக்கு 1940- இல் மகனாகப் பிறந்தவர் பரந்த்தாமன். இவர் சேலம் சிறுமலர் பள்ளியில் உயர்நிலை வகுப்பு வரை பயின்றார். 3- ஆம் வகுப்பு படிக்கும் முதலே வானம், குறிஞ்சி ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தியுள்ளார். ஓவியம் வரைவதிலும், கால் பந்தாட்டத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவர் 4- ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் மூலம் பத்திரிகை, புத்தகத் துறை மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பெரிய சூரமங்கலம் கிளை நூலகத்தில் கட்டணம் செலுத்திப் புத்தகங்களைப் பெற்று படிக்கத் தொடங்கினார்.

1972- ஆம் ஆண்டு மே 1- ஆம் தேதி அஃக் இலக்கிய இதழைத் தொடங்கினார் பரந்த்தாமன். அஃக் இதழ் தொடங்கியதுமே தர்மூ அரூப் சிவராம் அஃக் இதழில் எழுதத் தொடங்கினார்.  எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் மூலம் பெரிய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்து, பல படைப்புகளை அஃக் இதழில் அச்சிட்டு பிரசுரம் செய்தார்.

 மேலும், தனது தாய் லட்சுமி வட்டிக்கு வாங்கிக் கொடுத்த பணத்தில் பிருந்தாவனம் அச்சகத்தைத் தொடங்கி, அஃக் இதழை அச்சிட்டு வெளியிட்டார். அஃக் இதழில் வங்காளம், கன்னடம், மலையாளத்தில் வெளியான கலைத்திறனுடைய திரைப்படங்கள் விமர்சிக்கப்பட்டன. "அம்பையின் பயங்கள்' என்ற முதல் நவீன நாடகம் முதலில் அஃக் இதழிலேயே வெளியானது.

Story image

கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், நீல பத்மநாபன், லா.ச.ரா, ஜெயகாந்தன், அம்பை, நகுலன், சார்வாகன்,   வண்ணதாசன்,  ராசேந்திர சோழன்,   கலாப்ரியா, ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், சிந்துஜா, தேவதேவன், ஆதிமூலம், சாரங்கன், தேவதத்தன், நந்தலாலா என எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், இளம் கவிஞர்கள், ஓவியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அஃக் இதழில் பங்கேற்றுள்ளனர்.

1976- இல் வண்ணதாசனின் "கலைக்க முடியாத ஒப்பனைகள்' சிறுகதைத் தொகுப்புக்கு அச்சுக்காகவும், வெளியீட்டுக்காவும் இரண்டு தேசிய விருதுகளும், அஃக் சிறு பத்திரிகை அச்சுக்காகவும், வெளியீட்டுக்காகவும் என இரண்டு தேசிய விருதுகள் என மொத்தம் 4 விருதுகள் கிடைத்தன. இதில் வெளியீடு, அச்சு, தொகுப்புக்கு என மூன்று தேசிய விருதுகள் பரந்த்தாமனுக்குக் கிடைத்தது.

வியத்நாம் போரின்போது வீராங்கனை ஒருவரைப் பற்றி "தாமரை'யில் எழுதிய கவிதை வியத்நாம் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் கத்தியால் செதுக்கிய பன்வர்கட் ஓவியங்கள் சேலம் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது இவரது பெருமைகளுக்கு உதாரணம்.

 சுமார் 8 ஆண்டுகளில் 22 இதழ்களே வெளியான அஃக் இதழ் பாதியிலேயே நின்றது. பிறகு சினிமா துறையில் இயக்குநர் ஆகும் ஆசையில் தமிழ் திரையுலகில் நுழைந்த பரந்த்தாமனுக்கு போதிய அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்காமல் போனது. பல முன்னணி நடிகர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபோதும் அவரின் சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவு பெறவில்லை.

 முதுமை மற்றும் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், அவரால் மீண்டு வர முடியாத சூழலில் தவித்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளாக மற்றவர்களை அடையாளம் காட்டிய பரந்த்தாமன், தன்னை மறந்து மனப்பிறழ்வு ஏற்பட்டு, சென்னை மதுரவாயலில் உள்ள காப்பகத்தில் தங்கி காலம் கழித்து வருகிறார். இவருக்கு நந்தலாலா என்ற மகனும், சுருதி என்ற மகளும் உள்ளனர். இதில் நந்தலாலா திரைப்படத் துறையில் உள்ளார். இவர் 2009-இல் "நரகம்' என்ற குறும்படத் தயாரிப்புக்கு சர்வதேச விருது பெற்றுள்ளார். பரந்த்தாமனின் மனைவி சத்தியபாமா 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.

 இதுதொடர்பாக, சென்னையில் பணிபுரிந்து வரும் பரந்த்தாமனின் மகள் சுருதி கூறியது:

""எனது தந்தை பரந்த்தாமனுக்கு முதுமை, மனப் பிறழ்வு இருந்தாலும், அவருக்கு நல்ல காப்பகமும், தொடர் மருத்துவச் சிகிச்சைக்கு போதிய நிதியும் இருந்தால் அவரை குணமடையச் செய்து விடலாம். அவரை நல்ல காப்பகத்தில் வைத்து பராமரித்து, மருத்துவச் சிகிச்சைகள் அளித்து, உடல் நலம் தேறச் செய்ய போதிய பணம் இல்லை. அவர் உடல் தேறி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.